சென்னை :
வி.களத்தூர் கமால் பாஷா எழுதிய ‘ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம்‘ நூல் சென்னை கலாம் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் தனித்தனியாக இருந்த ஏழு அமீரகங்களை ஒன்றிணைக்கவும், அமீரக மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் பெரிதும் பாடுபட்டவர். உலக நாடுகளோடு இணக்கமாகவும் ஒத்துழைப்புடனும் செயல்படவேண்டும் என்று விரும்பி அதற்காக செயல்பட்டவர். இவரது வாழ்க்கை வரலாறு தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூல் இதுவாகும்.
இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு தொழிலதிபரும் ‘ எக்ஸ்பிரஸ் பாரதம்" ஆசிரியருமான லால்பேட்டை M. சிராஜுதீன் அவர்கள் தலைமை வகித்தார்.
தனது தலைமை உரையில், ஷேக் ஜாயித் வரலாறு குறித்து தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த வரலாற்று நூல் அனைத்து அமீரக தமிழ் வாழ் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படவேண்டும் என்று வலியுறித்தினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை தமிழ் அலை இசாக் வரவேற்று பேசினார்.
முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் வெளியிட, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனித நேயர் ஜே.எம்.ஹாரூண் பெற்றுக் கொண்டார்.
முதல் பிரதியை வெளியிட்டு வாழ்த்துப் பேசிய ஆளூர் ஷாநவாஸ் அரபு மன்னர்களிலேயே மிகவும் தைரியமானவராகவும் அநீதத்திற்கு எதிர்த்து குரல் கொடுத்தவருமாக ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் வாழ்ந்திருக்கிறார் என்ற தகவல் இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. உலக முஸ்லிம்களுக்கு இதுபோன்ற ஒரு தலைவர் இருந்திருந்தால் உலகமே அமைதியாகவும் நேர்மையாகவும் இருந்திருக்கும்‘ என்று கூறினார்-.
திரைப்பட நடிகரும் இயக்குநருமான திரு. ரமேஷ் கண்ணா பேசும்பொழுது ‘ஷேக் ஜாயித் பற்றிய வரலாற்று நூல் தமிழில் வந்திருப்பது பாராட்டுக்கு உரியது. இதற்காக முயற்சி செய்து நூல் எழுதிய வி.களத்தூர் கமால் பாஷாவிற்கு அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த சிராஜுதீன் அவர்களுக்கு பாராட்டுக்கள்‘ என்று தெரிவித்தார்-. தமுமுக மாநில தேர்தல் ஆணையர் அரும்பாவூர் தாஹிர் பாட்சா தமது வாழ்த்துரையில் அரபு மக்களைப் பற்றிய சிறந்த பதிவாகவும் ஷேக் ஜாயித் அவர்களின் அரசாட்சியின் தெளிவையும் இந்த நூலில் காண முடிகிறது என்றார்.
தமிழ்மாமணி எஸ்.எம்.கனிசிஷ்தி, பன்னூல் ஆசிரியர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது, இந்தியன் அபாகஸ் மேலாண்மை இயக்குநர் பஷீர் அஹமது, ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளுடைய மக்கள் கலந்துகொண்டு நேரில் இருந்து வாழ்த்தினர்.














0 thoughts on “ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம்‘ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது!”