மும்பை: சுத்தீகரிக்கப்பட்ட குடி தண்ணீரை குறைந்த விலையில் விற்பனை செய்ய ரயில் நிலையங்கள் தோறும் “குடிநீர் விற்பனை இயந்திரங்கள்” ( வாட்டர் வென்டிங் மெஷின்கள்) பொருத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. டிக்கெட் வழங்கும் இயந்திரங்களைப்போல் இதற்கு “wvms” இயந்திரங்கள் என ரயில்வே பெயர் வைத்துள்ளது. குறைந்த விலையில் சுத்தீகரிக்கப்பட்ட குடி தண்ணீர் ரயில் பயணிகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிளாட்பாரங்களில் இருக்கும் உணவகங்களில் தற்போது இலவசமாக குடிநீர் வழங்கப்படுகிறது. அதை சுத்தீகரித்து வழங்க அதற்கான கருவிகளை அமைக்கும்படி உணவக உரிமையாளர்களுக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது அதனுடன் இயந்திரங்களை நிறுவி குறைந்த விலையில் தண்ணீரை விற்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த இயந்திரங்களை நிறுவுவதற்காக தனியாரிடம் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டால் அதன் மூலம் குறைந்த விலையில் சுத்தமான தண்ணீர் விற்பனை செய்யப்படும்.ரயில்வேயின் இந்த திட்டம் மக்களை ஏமாற்றும் வேலை என ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரயில்வேயின் வருமானத்தை பெருக்க மக்களை ஏமாற்றும் மறைமுக நடவடிக்கை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது பிளாட்பாரங்களில் உள்ள உணவகங்களில் இலவசமாக குடி தண்ணீர் வழங்கப்படுகிறது. இயந்திரங்கள் அமைக்கப்பட்டால் இலவசமாக தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும். அப்போது மக்கள் இந்த இயந்திரத்தில் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள் எனவும் அவர்கள் எச்சரித்தனர். இதனிடையே முதற்கட்டமாக 30 குடிநீர் விற்பனை இயந்திரம் பொருத்தப்படும் எனவும் விரைவில் அவை அமைக்கப்படும் எனவும் மத்திய மற்றும் மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குடிநீர் விற்பனை இயந்திரத்தை பொருத்தும் திட்டத்தை இந்தியன் ரயில்வே கேட்டரிங் அன்ட் டூரிசம் கழகம் அறிமுகம் செய்கிறது. இயந்திரம் சப்ளை செய்யும் நிறுவனத்தை டெண்டர் முறையில் தேர்வு செய்யும் பொறுப்பும் எத்தனை இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்பதையும் அந்த கழகமே செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மற்றும் மேற்கு ரயில்வேயில் இது போன்ற 400 இயந்திரங்களை நிறுவ முடிவு செய்துள்ளோம். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அவை நிறுவப்படும். ரயில் நிலையங்களில் அதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்து வருகிறோம் எனவும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கழத்தின் அதிகாரிகள் தெரவித்தனர்.புதிய இயந்திரத்தில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் நாம் பாட்டில் வைத்திருந்து அதில் வாங்கினால் விலை மிகவும் குறைவு. அதாவது 300 மி லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் விலை ரூ.2. நாம் வைத்திருக்கும் கிளாசில் வாங்கினால் ரூ 1 மட்டும். அரை லிட்டர் பாட்டிலுடன் ரூ.5, பாட்டில் இல்லாமல் ரூ.3 மட்டும், ஒரு லிட்டர் பாட்டிலுடன் ரூ.8, பாட்டில் இல்லாமல் ரூ.5 மட்டும், இதுபோன்று 2 லிட்டா் பாட்டிலுடன் ரூ.12 பாட்டில் இல்லாமல் ரூ.8 ம், பாட்டிலுடன் 5 லிட்டர் ரூ.25ம் பாட்டில் இல்லாமல் ரூ.20 க்கும் விற்கப்படும். இந்த கருவிகளின் தண்ணீரை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் தண்ணீர் நிரப்ப பணியாளர்களும் இருப்பார்கள். சுத்தமான தண்ணீரை சப்ளை செய்ய தனியார் ஒப்பந்தகாரர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=167255













0 thoughts on “பயணிகளுக்கு குறைந்த விலையில் வழங்க ரயில் நிலையங்கள் தோறும் குடிநீர் விற்பனை இயந்திரம் : 1 கிளாஸ் தண்ணீர் ரூ.1 மட்டும் ”