சந்தீப் சக்சேனா| கோப்புப் படம். தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது 5.66 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, வரைவு வாக்காளர் பட்டியல் 15-ம் தேதி (இன்று) 234 தொகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ‘elections.tn.gov.in’ என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை தொடர்ந்து, இந்தாண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.62 கோடியாக இருந்தது.
2016ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் 5.66 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணியின் ஒரு பகுதியாக, கிராமசபைகள், உள்ளாட்சி அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்களில் இன்று முதல் இம்மாதம் 30ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும், இம்மாதம் 20-ம் தேதி மற்றும் அக்டோபர் 4-ம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த முகாம்களில், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்குள் இடமாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை கண்காணிக்க, இந்திய தேர்தல் ஆணையம் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Link: http://tamil.thehindu.com/tamilnadu/தமிழகத்தில்-566-கோடி-வாக்காளர்கள்-தலைமை-தேர்தல்-அதிகாரி-தகவல்/article7655889.ece













0 thoughts on “தமிழகத்தில் 5.66 கோடி வாக்காளர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் ”