புதுடெல்லி: நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஜெட் வேகத்தில் செல்கிறது. இதற்கு ஈடாக, மக்களின் உணவுப்பழக்கத்திலும் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக விருந்து நிகழ்ச்சிகளில் தற்போது பீட்சா, பர்கர் போன்ற உணவுப் பொருட்கள் நீங்காத இடத்தை பெற்றுள்ளன. சிலர் வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று இவ்வகை உணவுகளை ருசி பார்க்கின்றனர். பர்கரை பொறுத்தவரை பிரவுன், கருப்பு, சிவப்பு நிறங்கள் மக்களுக்கு பிடித்த ரகங்களாகும். தற்போது வெள்ளை நிற பர்கர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வகை பர்கர்களை டெல்லிவாசிகள் விரும்பி சாப்பிடுகின்றனர். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பார்சிலோஸ் உணவு நிறுவனம், வெள்ளை நிற பர்கர்களை அறிமுகம் செய்துள்ளது. வெண்ணிற ரொட்டியுடன் பச்சை மிளகுப்பொடி, மாங்காய் வற்றல், ஆரஞ்சு பழம், பூண்டு ஆகியவை சேர்க்கப்பட்டு பர்கர் தயாரிக்கப்படுகிறது. இதேபோன்று கருப்பு மற்றும் சிவப்பு நிற பர்கர்கள் தயார் செய்யப்படுகின்றன. இதுகுறித்து பர்சிலோஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ரோகித் மல்கோத்ரா கூறியதாவது: பர்கரை வண்ணம் மூலமாக நாங்கள் பிரிப்பதில்லை. ஏனெனில், ரொட்டி தயாரிப்பதற்காக கோதுமை மாவு மற்றும் பிற பொருட்களை சேர்க்கும்போது, ரொட்டியின் அசல் நிறமான பிரவுன் வந்துவிடும். சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பர்கரை தயார் செய்ய வேண்டுமெனில், அதற்கென பிரத்யேக பொருட்களை சேர்க்க வேண்டும். கருப்பு மற்றும் சிவப்பு நிற பர்கர்கள் போர்ச்சுகீசிய உணவு பழக்கங்களில் மிகவும் பிரபலம். இதேபோல் வெள்ளை நிற பர்கர்கள் தென்னாப்பிரிக்காவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை நிற பர்கர்களை விற்பனை செய்து வருகிறோம். மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் கூடுதலான ரகங்களை தயார் செய்கிறோம். ரொட்டியுடன் பால் பவுடர், தேங்காய் மற்றும் கோதுமை மாவு சேர்க்கப்பட்டு வெள்ளை நிற பர்கர் தயார் செய்யப்படுகிறது. தற்போது இவ்வகை பர்கர்களை டெல்லி மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இவ்வாறு ரோகித் கூறினார்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=166302













0 thoughts on “டெல்லிவாசிகள் விரும்பி சாப்பிடும் வெள்ளை நிற பர்கருக்கு மவுசு”