காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நெற்பயிர்களை எலிகள் சேதப்படுத்துவதிலிருந்து காக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை (செப்.8) 1,844 ஊராட்சிகளில் எலிக்கட்டுப்பாடு செயல்விளக்கம் மற்றும் விவசாய நிலங்களில் எலி ஒழிப்பு மருந்து வைக்கும் பணி நடைபெறுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களான கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மொத்தம் 1,844 ஊராட்சிப் பகுதிகளில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது நெற்பயிர்கள் வளர்ச்சி நிலை மற்றும் தூர்கட்டும் பருவத்தில் உள்ளன. இந்நிலையில் பூச்சி நோய் தாக்குதல் மட்டுமின்றி, அதிகளவில் எலிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு எலி ஒழிப்பு மருந்து தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ. 1.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதன்மூலம் விளைநிலங்களில் எலிமருத்து செயல்விளக்கமும், ஒரு ஊராட்சிக்கு தலா 10 கிராம் எடையுள்ள 10 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட எலிமருந்து பொட்டலங்களும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
இதற்கான எலிமருந்துகள் அந்தந்த வட்டார வேளாண்துறை ஊழியர்கள் மூலம், அரிசி, புரோமோடயலான், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த எலிமருந்தை அனைத்து ஊராட்சிகளின் வயல்களில் உள்ள எலி வலைகளில் ஒரே நாளில் வைக்க வேண்டும் என்றும், இந்தப் பணிகளில் மக்கள் பிரதிநிதிகள், கிராம ஊராட்சித் தலைவர்கள், குறுவை சாகுபடி பங்கேற்பு விவசாயிகள், உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர்கள், உழவர் நண்பர்கள், அம்மா பண்ணை மகளிர் குழு உறுப்பினர்கள் ஆகியோரை பயன்படுத்திக் கொள்ள வேளாண்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.














0 thoughts on “குறுவை நெற்பயிரைக் காக்க எலி வேட்டை”