புதுடெல்லி,
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜே. அப்துல்கலாமை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய மந்திரி மகேஷ் சர்மா அதை திரும்ப பெற வேண்டும் என அனைத்திந்திய மஜ்லிசே இத்தேயாதுல் முஸ்லிம் இயக்கத்தின் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) தலைவர் அசாதுதீன் ஓவாசி வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில், மத்திய மந்திரி மகேஷ் சர்மா செய்தி சேனல் ஒன்றில் கூறுகையில், முஸ்லிமாக இருந்தாலும் கூட (அப்துல்கலாம்) ஒரு சிறந்த தேசப்பற்று மிக்க மனிதர் என்ற அடிப்படையில் அவுரங்கசீப் சாலைக்கு அவரது பெயரை மாற்றியுள்ளோம் என தெரிவித்து இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுபற்றி இன்று அசாதுதீன் ஓவாசி தெரிவித்தவை பின்வருமாறு:-
சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்து சந்தேகம் கொள்வது தவறானது. அப்துல்கலாமை பற்றி மிகத்தெளிவாக மத்திய மந்திரி சர்மா கூறிவிட்டார். அதாவது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், சிறந்த தேசியவாதி, சிறந்த மனிதர் என்று கூறியிருக்கிறார். இது எதை காட்டுகிறது. முஸ்லிம்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்பதை தெளிவாக சொல்கிறார். இது தவறானது. ஒரு கலாச்சார துறை மந்திரியாக இருக்கும் அவர் இப்படி கலாச்சாரமின்றி நடந்து கொள்ளலாமா?. அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இந்தியாவில் வாழும் 17 கோடி முஸ்லிம்களும் தேசப்பற்று கொண்டவர்கள் அல்ல என மத்திய அரசு நினைக்கிறதா? என்பதை பிரதமர் மோடி உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு ஓவாசி வலியுறுத்தியுள்ளார்.
Link: www.DailyThanthi.com/News/India/2015/09/18203542/Owaisi-demands-Sharmas-dismissal-for-remark-on-Kalam.vpf













0 thoughts on “அப்துல்கலாம் பற்றி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெற வேண்டும்; மத்திய மந்திரி சர்மாவுக்கு ஓவாசி வலியுறுத்தல்”