துபாய்: வளைகுடா நாடுகளில் தமிழக வாழைப்பழங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரத்யோகமாக புதிய பெயரில் துபாயில் தமிழகத்தை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் தனியார் நிறுவனம் தமிழகத்தில் உற்பத்தியாகும் வாழைப் பழங்கங்களை அறிமுகப்படுத்தி வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. வளைகுடா நாடுகள் ஆண்டு தோறும் 50லட்சம் டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்கிறது. இதில் இறக்குமதியில் வாழைப்பழங்கள் முக்கிய இடம் வகிக்கிறது.வளைகுடா நாடுகளில் பிலிப்பைன்ஸ், இந்திய வாழைப்பழங்கள் அதிகப்படியாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வளைகுடா நாடுகளில் தமிழக வாழைப்பழங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக வாழைப்பழங்களில் அதிகப்படியான இனிப்பு சுவையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமீப காலமாக தமிழகத்திலிருந்து வாழைப்பழ ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபியா, யுஏஇ, குவைத் உள்பட அரபுநாடுகளுக்கு 200 கண்டெய்னர்கள் மூலம் 4 ஆயிரத்து 300 டன் வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 12 ஆயிரத்து 900 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகம். சமீபத்தில் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஸ்டார் பிரஷ் என்ற பெயரில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டில் புதிய பிராண்டில் தமிழக வாழைப்பழங்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தமிழகத்தை சேர்ந்த முஜீப் கூறுகையில், வாழைப்பழங்களில் 14லிருந்து 15 வரை இனிப்பு சுவை இருக்கும் ஆனால் தமிழக வாழைப்பழங்கள் 18லிருந்து 21 சதவீதம் இனிப்பு சுவை உள்ளது. எனவே பழத்தின் ருசி அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தின் மூலம் பிரத்யோகமாக தமிழக வாழைப்பழங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாதந்தோறும் 75 டன் வரை ஏற்றுமதி செய்கிறோம். தமிழக பழங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து மத்திய கிழக்குநாடுகளில் 10 ஆயிரம் டன் வாழைப்பழங்கள் மாததோறும் இறக்குமதி செய்யப்படுகிறது.வரும்காலங்களில் மாதந்தோறும் 500 டன் வரை தமிழக வாழைப்பழங்களை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம் இதன் மூலம் தமிழகத்தில் வாழைப்பழ விவாசாயம் பெரும் வளர்ச்சியடையும் என்றார். துபாயில் தமிழக வாழைப்பழங்களை ஸ்டார் பிரஷ் என்ற பெயரில் தனியார் நிறுவனத்தினர் அறிமுகம் செய்தனர்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=165380













0 thoughts on “வளைகுடா நாடுகளில் வரவேற்பை பெறும் தமிழக வாழைப்பழம்!!”