நியூயார்க்: உலகம் முழுவதும் சராசரியாக 5 வயதுக்குட்பட்ட சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் தினந்தோறும் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு அமைப்பான உலக சுகாதரா நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் இணைந்து உலகளாவிய வகையில் குழந்தைகளின் நிலையை ஆய்வு செய்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலான இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 1990-ம் ஆண்டில் 5 வயது நிரம்பாத, 1.27 கோடி குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதுவே 2015-ம் ஆண்டில் குழந்தைகள் இறப்பு 60 லட்சமாக குறைந்துள்ளது. 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளின் உயிரிழப்பு 50 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த புள்ளிவிபரங்களை இணைத்துப் பார்த்தால், உலகம் முழுவதும் தினந்தோறும் 5 வயதுக்கு குறைவான சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் சராசரியாக உயிரிழப்பதாகவும், இதில் பாதிப்பேர் ஊட்டச்சத்து குறைவினால் பலியாகும் அதிர்ச்சி தகவலும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது. பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களாக பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், மலேரியா, நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=167058













0 thoughts on “உலகம் முழுவதும் தினந்தோறும் 16 ஆயிரம் குழந்தைகள் பலி: யுனிசெப் ஆய்வறிக்கையில் தகவல்”