பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் ஆகஸ்ட் 22ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் ஆக.25ம் தேதி எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 198 வார்டில் பாஜ 100 இடங்களிலும், காங்கிரஸ் 76 இடங்களையும், மஜத 14 இடங்களிலும், சுயேட்சைகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் மாநகராட்சி சட்டவிதிகளின்படி மேயர் தேர்தலின்போது பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏ, எம்எல்சி, எம்.பிக்கள் ஆகியோரும் வாக்களிக்கலாம் என்பதால், காங்கிரஸ் சார்பில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி பேச்சு நடத்தப்பட்டது.காங்கிரசுக்கு ஆதரவளிக்க 7 சுயேட்சைகள் முன்வந்தனர். காங்கிரசுக்கு மேயர் பதவியும், மஜதவுக்கு துணை மேயர் பதவியும், சுயேட்சைகளுக்கு நிலைக்குழு தலைவர் பதவி வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சியில் நேற்று மேயர் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பி.டி.எம் லேஅவுட் வார்டு உறுப்பினர் மஞ்சுநாத் ரெட்டி 131 வாக்குகள் பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதே பதவிக்கு பாஜ சார்பில் கவுன்சிலர் மஞ்சுநாத் ராஜூ என்பவர் 128 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். துணை மேயர் தேர்தலில், மஜத கவுன்சிலர் ஹேமலதா வெற்றி பெற்றார். பாஜ கவுன்சிலர் நாகரத்னா தோல்வி அடைந்தார். மாநகராட்சியை கைப்பற்றியும், மேயர் பதவியை பாஜ.வால் கைப்பற்ற முடியவில்லை.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=166596













0 thoughts on “பெங்களூர் மேயர் பதவியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி : பா.ஜ ஏமாற்றம்”