ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் ஏற்படுத்தித்தர முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டசபையில் நேற்று நடந்த கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால் வளம் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பெரியகருப்பன் பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
பால் கொள்முதல்
உறுப்பினர் பெரியகருப்பன்:- நான் சொந்தமாக மாடுகள் வளர்க்கிறேன். சொசைட்டிக்குத் தான் பால் ஊற்றுகிறேன். 20 நாட்கள் பால் வழங்கியதற்கான தொகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா:- பாக்கி என்ற நிலை தற்போது இல்லை. ஒரு நாளைக்கு ரூ.15 கோடிக்கு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்கிறது. அப்படி பார்த்தால், 3 நாட்களுக்கு ரூ.45 கோடி என்ற அளவில் தான் பாக்கி தொகை வழங்க வேண்டியுள்ளது. 20 நாட்கள் பாக்கி என்று உறுப்பினர் சொல்வது ஆதாரமில்லாதது.
உறுப்பினர் பெரியகருப்பன்:- பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை முழுவதுமாக ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும்.
அமைச்சர் பி.வி.ரமணா:- தமிழகத்தில் 7 கோடி மக்கள் இருக்கின்றனர். ஒருவருக்கு 250 மில்லி லிட்டர் என்ற அளவில் ஒரு கோடியே 77 லட்சம் லிட்டர் பால் தினமும் தேவைப்படுகிறது. ஆனால், தேவைக்கு அதிகமாக ஒரு கோடியே 87 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி?
உறுப்பினர் பெரியகருப்பன்:- பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் ஏற்படுத்திதர அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டு வருகிறது.
உறுப்பினர் பெரியகருப்பன்:- தமிழக அரசு வழங்கிய இலவச ஆடுகளை பெற்ற பயனாளிகள், சரியான மேய்ச்சல் நிலம் கிடைக்காமல் பாதுகாப்பற்ற நிலையில் ஆடுகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- தேனி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு 4 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 24 ஆயிரம் ஆடுகள் 53 ஆயிரம் குட்டிகளை ஈன்றுள்ளன. அதனால், ஏழைகளின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
அமைச்சர் டி.கே.எம்.சின்னையா:- தமிழ்நாட்டில் 1,856 பஞ்சாயத்துகளில் 5 லட்சத்து 98 ஆயிரம் பயனாளிகளுக்கு 23 லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆடுகள் 31 லட்சத்துக்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.728 கோடியாகும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
படுக்கை வசதியுடன் கூடிய அரசு பஸ்
படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுமா? என்று உறுப்பினர் குணசேகரன் (சிவகங்கை) கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர், ‘தற்போது இது குறித்த செயற்குறிப்பு ஏதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று தெரிவித்தார்.














0 thoughts on “ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் ஏற்படுத்தித்தர ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்”