திருச்சி வயலூர் ரோட்டில் சோழங்கநல்லூர் அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர பள்ளி சார்பில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இன்று காலை வியாழன் மேடு, சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் சோழங்கநல்லூருக்கு வந்துக்கொண்டிருந்தது. வேனை புலியூரை சேர்ந்த கார்த்தி ஓட்டி வந்தார். வேன் உரிமையாளர் புலியூரை சேர்ந்த தியாகராஜனும் உடனிருந்தார்.
வயலூர்–சோழங்கநல்லூர் பிரிவு ரோடு பகுதியில் ரெட்டைவாய்க்கால் அருகே ரோட்டின் இடதுபுறம் வேன் திரும்பியபோது எதிரே கார் ஒன்று வேகமாக வந்தது. அதற்கு வழிவிட டிரைவர் பள்ளி வேனை ஒதுக்கிய போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த ரெட்டை வாய்க்காலுக்குள் பாய்ந்தது. வேனுக்குள் சிக்கிய மாணவிகள் கூச்சலிட்டனர். அதற்குள் வாய்க்காலுக்குள் வேன் கவிழ்ந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவிகளை மீட்க வாய்க்காலுக்குள் குதித்தனர். வேன் கதவை திறந்து ஒவ்வொரு மாணவியாக மீட்டனர். மாணவிகள் அட்சயா, அக்னிதா, வர்ஷவர்த்தினி, மாணவன் சந்தோஷ்குமார், தரணிதரன், டிரைவர் கார்த்திக், வேன் உரிமையாளர் தியாகராஜன் ஆகிய 7 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
உடனடியாக மாணவ, மாணவிகள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். வேன் வாய்க்காலுக்குள் கவிழ்ந்த தகவல் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சியில் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
ஆஸ்பத்திரியில் குழந்தைகளை பார்த்து கதறி அழுதனர். இதில் 5 மாணவ, மாணவிகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில் மாணவி வர்ஷவர்த்தினிக்கு மூக்கு உடைந்தது.
சோமரசம்பேட்டை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கமாக பள்ளிக்கு இந்த பகுதி குழந்தைகளை அழைத்து செல்ல ஆம்னி வேன் இயக்கப்பட்டு வந்தது. நேற்று தான் புதிதாக வேன் வாங்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவிலுக்கு சென்று வேனுக்கு பூஜை செய்துவிட்டு பள்ளி குழந்தைகளை அழைத்து வந்த போது தான் விபத்து நடந்துள்ளது.













0 thoughts on “திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வேன்: 5 பேர் காயம்”