கொழும்பு: இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடந்த 2வது டெஸ்டில், பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை, இந்தியா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 393, இலங்கை 306 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 328/8 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தது. பின், 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே (25), கேப்டன் மாத்யூஸ் (23) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று (ஆக.,24) 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கையின் மாத்யூஸ் (23) ஏமாற்றினார். அடுத்து வந்த சண்டிமால் (15), திரிமான்னே (11) சோபிக்கவில்லை. முபாரக், தம்மிகா பிரசாத் டக்-அவுட் ஆனார்கள். பொறுப்பாக ஆடிய கருணாரத்னே (46) அரைசத வாய்ப்பை இழந்தார். தரிண்டு கவுசால் (5), சமீரா (4) நிலைக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 134 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. ஹெராத் (4) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 5, அமித் மிஸ்ரா 3 விக்கெட் கைப்பற்றினர்.இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆனது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் ஆக., 28ல் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் துவங்குகிறது.
Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1325818













0 thoughts on “இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி”