கர்நாடகாவில் இன்று நடைபெறும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலில், 10 ஆயிரம் ரூபாய் பணம் தருபவருக்கு ஓட்டளிப்பதாக, டாக்டர் ஒருவர், இணையதளத்தில் புதுமையாக விளம்பரம் செய்துள்ளார். கர்நாடகாவில், காங்., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. ஆனால், தலைநகரான பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், பா.ஜ., வசம் உள்ளது. மாநகராட்சி உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான, பிருகத் பெங்களூரு மகாநகர பாலிகே எனப்படும், பி.பி.எம்.பி., தேர்தல் இன்று நடக்கிறது. காங்., மற்றும் பா.ஜ., வேட்பாளர்கள், ஒரு ஓட்டுக்கு, 2,000 முதல், 5,000 ரூபாய் வரை, வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக, சுயேச்சை வேட்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு டாக்டர், தன் ஓட்டை, க்விக்கர் என்ற, பொருள் விற்பனை குறித்த விளம்பரங்களை வெளியிடும் இணையதளம் ஒன்றில், ஏலத்தில் விடுவதாக விளம்பரம் செய்துள்ளார். தவிர, தன் ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை எதிர்பார்ப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.தவறாமல் ஓட்டளிப்பவர்:க்விக்கர் இணையதளத்தில், டாக்டர் செய்துள்ள விளம்பரத்தின் விவரம்:நான், அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் ஓட்டளிப்பவன். எனவே, வரும்பி.பி.எம்.பி., தேர்தலில், அதிக விலை கொடுப்பவருக்கு என் ஓட்டை விற்க முடிவு செய்துள்ளேன். என் ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால், பி.பி.எம்.பி.,யால் நிறைவேற்றப்படும் திட்டங்களில், 5,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடக்கிறது. ஒரு வார்டில் வெற்றி பெற, குறைந்தபட்சம், 5,000 ஓட்டுகள் பெற வேண்டும். எனவே, வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதின் மூலம், ஐந்து கோடி ரூபாய் செலவழித்து, ஐந்து ஆண்டுகளில், 250 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். என் ஓட்டை பெற விரும்பும் வேட்பாளர், விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தவறாமல், இந்த விளம்பரத்தை க்விக்கர் டாட் காமில் பார்த்தேன் என தெரிவிக்கவும். இவ்வாறு அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்த...:இதுகுறித்து,விளம்பரம் செய்த டாக்டர் கூறுகையில், வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு விளம்பரம் செய்துள்ளேன். மாநகராட்சி உறுப்பினர்கள் எவ்வளவு ஊழல் செய்கின்றனர் என்பதை வாக்காளர்கள் உணர்ந்து, தகுதியான வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டும், என்றார்.டாக்டரின் இந்த புதுமையான விளம்பரம், பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.அனைத்து வார்டுகளிலும் பணம்?பெங்களூரில் உள்ள, 198 வார்டுகளுக்கான தேர்தலில், காங்., - பா.ஜ., முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். காங்., மற்றும் பா.ஜ., இத்தேர்தலை கவுரவப் பிரச்னையாகக் கருதுவதால், இதில், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என, இரு கட்சி வேட்பாளர்களும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தனர். இந்நிலையில், அனைத்து வார்டுகளிலும் வாக்காளர்களுக்கு, பணம், இலவசப் பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.- நமது நிருபர் -
Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1323944













0 thoughts on “பெங்களூரு மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஓட்டு விற்பனை:இணையதள விளம்பரத்தில் டாக்டர் புதுமை ”