நவீன காலத்திற்கு ஏற்றவகையில் சுற்று சூழலை பாதுகாக்கவும், உணவு உற்பத்தியை பெருக்கவும் புரட்சிகரமான மாடித் தோட்டம் பெரிதும் பயன்படுகிறது.
உலகில் வளர்ச்சி அடைந்த பல்வேறு நாடுகளில், மாடித் தோட்டம் என்ற நகர விவசாயம் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக வெப்பமயமாதலைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அலுவலகங்களில் மாடித் தோட்டம் அமைப்பதை கட்டாயமாக்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்த மாடித் தோட்டம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும், பயன்களையும் உணர்த்தும் வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
எளிய முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், தமிழகத்தில் இதுவரை 15,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் பாளையங்கோட்டை வேளாண்மை உதவி மையத்தில் மாதம் தோறும் வீட்டுத்தோட்ட பராமரிப்பு குறித்து நெல்லை, தூத்துக்குடி வேளாண் மக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாடித் தோட்டம் அமைப்பதால், வீட்டிற்குள் இறங்கும் வெப்பத்தின் அளவில், 4 டிகிரி அளவு குறையும். அதிக அளவு செடி, கொடிகள் வளர்க்கும்போது, மென்மேலும் வெப்பத்தின் அளவு குறையும். காற்றில் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கிறது. காய்கறிப் பயிர்கள் மட்டுமின்றி, அருகம்புல், அகஸ்டின் புல், ஜப்பான் புல், கொரியன் புல் உள்ளிட்ட பல்வேறு புல் வகைகளை வளர்ப்பதால், வெப்பத்தின் அளவு அறவே குறைகிறது.
வயல்வெளிகளில் விரைவில் விளைச்சல் காணவும், அதிக உற்பத்தியை பெருக்கவும் பூச்சி மருந்துகளையும், பல்வேறு நவீன உரங்களையும் இடுகின்றனர். இதனால், காய்கறிகளில் இருக்கும் இயற்கைச் சத்துக்கள் குறைந்து வருகின்றன. ஒரு மனிதன் தினமும் 300 கிராம் காய்கறிகளையும், 85 கிராம் பழங்களையும் உட்கொள்ள வேண்டும். ஆனால், பொருளாதார தேவை கருதி சாப்பிடுவதில்லை. மாடித் தோட்டம் அமைக்கும் போது, வீட்டிற்கு தேவையான சத்து குறையாத காய்கறிகளை நாமே பயிர் செய்து கொள்ளலாம்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும், இல்லத்தரசிகளும் மாடித் தோட்டம் அமைத்தால், அவர்களது மன அழுத்தம் குறையும். பயிர்கள் மீது அக்கறையும், வளர்ச்சியும் கொண்டிருப்பதால், இல்லத்தரசிகள் தங்கள் குழந்தைகளைப் போலவே அவற்றை நினைத்துக் கொள்வார்கள். பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாத போதும், மனக்குமுறலை வெளியில் சொல்ல நினைக்கும் போதும், இத்தோட்டம், அவர்களுக்கு நல்லதொரு துணையாக அமையும் என்கின்றனர் உளவியலாளர்கள். பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றுவதாலும், அவற்றை கவனிக்கும் போதும், மாடித் தோட்டம் மிகச் சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது.
Link: http://www.ns7.tv/ta/node/114345













0 thoughts on “நவீன காலத்திற்கு ஏற்ற புரட்சிகரமான மாடித் தோட்டம்”