உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மாசுபடுவதை தடுக்க உத்தரப்பிரதேச அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஆக்ராவில் கார் உரிமையாளர்கள் அனைவரும் வாகன நிறுத்துமிடம் வைத்திருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்வது கட்டாயம் என தாஜ்மகால் பகுதிக்கான நிர்வாக ஆணையம் அறிவித்துள்ளது.
அவ்வாறு சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு வாகனங்களுக்கான பதிவு எண் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனி ஆக்ராவின் சாலையோரங்களில் மற்றும் பூங்காக்கள் போன்ற அனுமதி இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாஜ்மகால் பகுதி நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் அமைந்துள்ள பகுதியில் காற்று மாசு காரணமாகவும், வாகனங்களின் புகையாலும் தாஜ்மகால் மாசுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இவ்வாறு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மிகவும் மாசுபடும் நகரங்களின் பட்டியலில் நாட்டிலேயே 19-வது இடத்தில் ஆக்ரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ராவில் மட்டும் ஆண்டுதோறும் 80 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், இவ்வாறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாஜ்மகாலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தாஜ்மகால் பகுதி நிர்வாக ஆணையம், சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவு இடத்தை தமது கட்டுப்பாட்டில் நிர்வகித்து வருகிறது.
Link: http://www.ns7.tv/ta/node/117001













0 thoughts on “தாஜ்மகால் மாசுபடுவதை தடுக்க உத்தரப்பிரதேச அரசு புதிய நடவடிக்கை”