சென்னை: சென்னையில் இருந்து அந்தமான செல்லும் ஏர் இந்தியா விமானம் காலை 11.10 மணிக்கு சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 77 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் என 82 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் சென்ற போது திடீரென விமானத்தின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், விமானம் பயங்கரமாக குலுங்கியது. பீதியடைந்த பயணிகள் மரணபயத்தில் அலறினர். எனினும், விமானி மிக சாமர்த்தியமாக விமானத்தை கட்டுக்குள் கொண்டுவந்து ஓடு தளத்திலேயே நிறுத்தினார். இதனை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர் விமானம் நின்ற இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், பயணிகள் ஒவ்வொருவராக பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், டயர் வெடித்து விபத்துக்குள்ளான விமானம், இழுவை இயந்திரம் மூலம் இழுத்து செல்லப்பட்டது. விபத்துக்குள்ளான அந்த விமானம் தொடர்பாக, பாதுகாப்பு அதிகாரிகள், ஏர் இந்தியா அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Link: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=79814













0 thoughts on “ஏர்இந்தியா விமானம் டயர் வெடித்தது 77 பயணிகள் உயிர் தப்பினர்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு”