கட்டாக்: அரசு மருத்துவமனையில் ஏழு நாட்களில் 35 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த வேதனையான சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனயில் பிறந்த குழந்தைகள் இறக்கும் சம்பவம், தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று மட்டும் மருத்துவமனையில் 5 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும், மருத்துவமனையில் 35 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையானது கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையாகும். மருத்துவமனையில் தினமும் சுமார் 300 வரையிலான குழந்தைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 50 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே சேர்க்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது மற்றும் புறக்கணிப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழந்துவிட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மருத்துவமனையில் உள்ள 40 மருத்துவர்களில், 20 பேர் குழந்தைகள் பிரிவை கவனித்து வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை புறக்கணிக்கப்பட்டதாக 2 பெற்றோர்கள் ஏற்கனவே புகார் தெரிவித்து உள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று நேற்றும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக, அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரையில், எஸ்.சி.பி. மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் குழந்தைகள் பிரிவில் இணைந்து கொள்வார்கள் என்றும், நாளையில் இருந்து சிகிச்சை அளிக்க தொடங்கிவிடுவார்கள் என்றும் மத்திய வருவாய் கோட்ட ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக பரிசோதனை செய்த நிபுணர்கள் குழுவும் சிகிச்சை புறக்கணிப்பு என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
Link: http://www.vikatan.com/news/article.php?aid=51614













0 thoughts on “அரசு மருத்துவமனையில் 7 நாளில் 35 குழந்தைகள் உயிரிழப்பு: இந்தியாவில்தான் இந்த கொடுமை!”